Tuesday, June 30, 2009

ருத்ரன்...(உரையாடல் : சமூக கலை அமைப்பின் போட்டிக்கானது)



இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

ருத்ரன்:


இந்த கதைக்கு அவன் களமாக இருந்தான் என்பதைத் தவிர எனக்கும் அவனுக்குமான புரிதல் அதிகம் இருந்தது இல்லை,மற்றப்படி அவன் நான் தினந்தோறும் காலையும் , மாலையும் சந்திக்கும் சக மனிதன்.


அவன் பிறரிடம் மிச்சம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கத்தையும் ஐம்பது காசுகளிலோ அல்லது ஒரு ரூபாயோ என தொடங்கி அவர் அவரின் வசதிக்கு ஏற்ப அவர்களின் பரிதாபம் என்னும் உணர்ச்சியை (கவனிக்கவும் வசதிக்கு ஏற்ப மனதிற்கு ஏற்ப அல்ல.....)வாங்குவது அவனுடைய தொழில்....

அவர்களின் உணர்ச்சியை அல்லது பரிதாபத்தை அவன் சம்பாதித்தால் காசும்,குறை இருந்தால் வசவும் மாறி மாறி வரும்...

அன்றைய தினம் ஆபீஸில் முக்கிய பிரசண்டேசன் இருந்தால் என் பாக்கெட்டில் இருந்து ஐந்து முதல் பத்து வரை உள்ள ரூபா தாள்களில் ஒன்றை எடுத்து அவன் கைகளில் கிரகபிரவேசம் செய்து வைப்பேன் ,எல்லாம் கடவுள் நம் தர்மத்தை கண்டு அன்றைய தலைவிதியில் சில திருத்தங்கள் செய்வார் என்ற நப்பாசையில்.

அவன்?
அவன் கண்களில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும்,ஏன் யாரால் எப்படி இப்படி ஆனேன் என்று யோசிப்பானோ என்று நான் பல முறை யோசித்ததுண்டு.வருடக்கணக்கில் தேக்கி வைத்த ஆற்றாமை, சோகத்தை நாம் கடக்கும் அந்த நொடிப்பொழுதில் கண்களில் கொண்டு வருவான்,அந்த கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் பல முறை நான் தோற்றிருக்கிறேன்,அவனை சந்திக்கும் ஒவ்வொரு நாளும் சிறு பாரம் மனதில் குடிகொள்ளும்.

அவன் ஊமையா என்றால் அதுவும் இல்லை,ஒரு நாள் பத்து ரூபாயை போட்ட போது
"இன்னைக்கு என்ன முக்கிய வேலை சார்?"என்று கேட்டிருக்கிறான்,
அந்த கேள்வியை லட்சியம் செய்யாமல் கேவலம் நீ சக மனிதன் தானே என்று நகர்ந்திருக்கிறேன்.
ஒரு நாள் அவன் டீக்கடைக்கு போகும் பொது அவனுக்கு ஒரு கால் இல்லை என்று கண்டிருக்கிறேன், வயது? தெரியாது! வயோதிக வாலிபனாகவும் இருக்கலாம் நிச்சயம் வாலிப வயோதிகன் இல்லை.

கையில் சுரீர் என்று ஏதோ உரைக்க,கையில் பார்மிக் அமிலத்தை செலுத்திக்கொண்டிருந்த அந்த எறும்பால் சுய நினைவுக்கு வந்தேன்.
அந்த எறும்பை நசுக்கி என் குரூரத்தை காட்டிவிட்டு,உடனே சகமனிதப் போராட்டத்தின்அங்கமாகிய ஆபிஸ் செல்லுதல் வைபவத்துக்கு விரைந்தேன்,
ஏனோ அவன் நினைவுகள் என்னை விட்டு அகலவில்லை...



அவனின் பிழைப்பு பிறரின் இரக்கமாகிய உணர்ச்சியை சுரண்டி பார்த்து காசுவாங்குவது...

என் பிழைப்பு?
நான் கொடுக்கும் பிரசண்டேசன் போர்ட் மெம்பெர்ஸ் அனைவரின் உணர்ச்சியை தூண்டி அவர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றால் தலை தப்பும்,

அனைவரும் ஒரு வகையில் உணர்ச்சிகளின் பிடியில் இருக்கிறோம்,

எழுத்தாளன் போதுமான அளவு பிறரின் அல்லது குறைந்த பட்சம் பத்திரிக்கை ஆசிரியரின் உணர்ச்சியை தூண்டும் அளவுக்கு எழுதினால் பத்திரிக்கையின் ஏதாவதொரு மூலையில் அந்த படைப்பு நாய் கொண்டு போட்ட வஸ்த்து போல் ஒதுங்கி இருக்கும்....
இவர்கள் மட்டும் அல்ல,

அரசியல்வாதி, இயக்குனர்கள்,பேச்சாளன்,செய்திகள் ,எழுத்தாளன்,என்று தொடங்கி விலைமகள் வரை உணர்ச்சியை கிளப்பும் படி இருந்தால் கவனம் பெறுகிறார்கள்/பெறுகிறது....

அன்று மாலை திரும்பும் போது , அவனை அவன் இடத்தில் தேடினேன்,அவனை ஏதோ செத்து கிடந்த நாய் போல் அனைவரும் கடந்து செல்ல,நடுவே ரத்தவாந்தி எடுத்து மயங்கி இருந்தான், லுக்கிமீயாவோ அல்லது தொண்டை புற்றோஅல்லது அஜீரனமோ(ச்சே இராது) ஏதோ ஒன்றினால் அவன் பாதிக்கபட்டுள்ளான்.

ச்சே என்ன மனிதர்கள் இவர்கள் ,சக மனிதனின் ஜீவமரண போராட்டம்இவர்களை உலுக்கவே இல்லையா?ஏதோ நடுவில் கிடக்கும் கல் போல்தாண்டியும் கடந்தும் செல்கிறார்களே,
ஏன் நான் ?நான் என்ன செய்ய வேண்டும்?கேவலம் நானும் பாவப்பட்ட சகமனிதன்தானே!முடிந்தவரை அவன் கண்களில் படாமல் நகர்ந்தேன்...


இரவில் அவனின் முகம்,அந்த என்னை அலைகழித்தன, ச்சே என்ன வாழ்வு இது,இந்த வாழ்க்கைக்கு மரணம் ஒரு பரிசு என்றே எனக்கு தோன்றியது,இந்தவாழ்க்கை அவனுக்கு தேவையா?தினம் தினம் போராட்டம்,

"சக மனிதனுக்கு உணவு இல்லை எனில் சகத்தினை அழித்து விடுவோம்"

என்று ஏதோ ஒரு கவி சொன்னது ஞாபகத்தில் வந்தது,அப்படி பார்த்தால் தினம் தினம் இந்த பூமி அழிந்து கொண்டிருக்கும்.... அவனின் இந்த ஈன பிழைப்புக்கு தீர்வு ஒன்று தான்,...எப்படி தூங்கினேன் என்று தெரியாது ஆனால் தூங்கி விட்டேன்.

மறுநாள் வழக்கம் போல்ஆபிஸ் போக விரைந்தேன்,வழியில் அவனை தேடினேன்,அங்கே அவன்இருந்தான் கண்களில் பூரண அமைதியோடு,அவன் தேடியதை கண்டு விட்ட திருப்தியோடு இருந்தான்,இடுப்புக்கு கீழே காரோ அல்லது அது போன்ற ஏதோஓடியதற்கான அடையாளத்துடன் மெளனமாக அடங்கியிருந்தான்,கூட்டத்தை விளக்கிக் கொண்டு நகர்ந்தேன்,ஏனோ மனதில் ஒரு நிம்மதி,சற்று தூரம் நகர்ந்ததும் கையில் ஏதோ சுரீர் என்று உரைத்தது, எறும்புதான்...


ஏனோ அதை நசுக்க மனம் இன்றி நடக்க ஆரம்பித்தேன், எதை நோக்கி என்று தெரியாமல்.....

->நன்றி கார்த்திகேயன் (COOLZKARTHI)

2 comments:

S.A. நவாஸுதீன் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் கார்த்தி.

கலையரசன் said...

அருமையான எழுத்து நடை!
வெற்றி பெற வாழ்த்துகள்..

Blog Widget by LinkWithin